logo

கச்சா எண்ணையும், பங்கு வர்த்தகமும்

FOREX ONLINE COURSES PONNER, FOREX PRICE ACTION PONNER, FOREX TRADING STRATEGIES PONNER, FOREX TRAINING COURSE PONNER, FOREX TRAINING COURSES PONNER

கச்சா எண்ணையும், பங்கு வர்த்தகமும்

FOREX ONLINE COURSES PONNER, FOREX PRICE ACTION PONNER, FOREX TRADING STRATEGIES PONNER, FOREX TRAINING COURSE PONNER, FOREX TRAINING COURSES PONNER

உலகின் மிகப்பெரிய எண்ணெய் செலவழிக்கும் நாடு அமெரிக்கா. அதே போல உலகெங்கும் இருக்கும் எண்ணெய் வளங்களை எப்படியாவது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘தாதா’ நாடும் கூட. ஆனாலும் அந்த நாட்டில் சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் விலையை அரசு நேரடியாக தலையிட்டு நிர்ணயம் செய்வதில்லை. ‘தேவை – உற்பத்தி’ சமன்பாட்டின் படி ஆயில் கம்பெனிகள் அதை முடிவு செய்கின்றன. இருப்பினும் குடியரசுக் கட்சியைத் தங்களது சட்டைப் பையில் போட்டு வைத்திருக்கும் இந்தக் கம்பெனிகள் ‘நம்ம ஆட்கள் ஜெயிக்கட்டும், பிறகு பாத்துக்கலாம்’ என்று தற்காலிகமாக விட்டுப் பிடிப்பதாகச் சொல்கிறார்கள்.

மேற்கொண்டு பேசுவதற்கு முன் கச்சா எண்ணெய் விலை எப்படி நிலவி வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது நலம். 1978 ஆம் வருடம் ஒரு பேரல் $15 க்கு விற்ற கச்சா எண்ணெய் 2002 வருடம் கிட்டத்தட்ட அதே அளவிலேயே இருந்தது; இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட. அதன் பிறகு உலகலாவிய அளவில் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியை சீனா முன்னின்று நடத்திச் சென்றது. கடந்த 25 ஆண்டில் சராசரியாக 9% பொருளாதார வளர்ச்சியை அந்த நாடு ஏட்டியது. இந்தியாவும் சளைக்காமல் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து நிலைநாட்ட நம்மைப் போன்ற நாடுகள் அதிகரித்த எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. அதன் காரணமாகவும் உலக எரிபொருள் தேவை சீராக உயர்ந்தது.

தேவை ஒரு பக்கம் உயர, இன்னொரு பக்கம் உற்பத்தியில் பல சிக்கல்கள் உண்டாயின. கடந்த ஆண்டுகளில் அமெரிக்க மெக்சிகோ வளைகுடாவைத் தாக்கிய சூறாவளி அங்கே செறிந்திருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஈராக் யுத்தம், ஈரானில் பதட்டம், வெனிசுலா விவகாரம் ஆகியவையும் உடன் சேர்ந்து கொண்டன. கோடை காலத்தில் சகட்டு மேனிக்கு கார் ஓட்டுகிற மேலைநாட்டு வழக்கம் தேவையை மேலும் கூட்டியது. போதாக் குறைக்கு கச்சா எண்ணெய் டிரேடிங் செய்பவர்கள் எரிகிற எண்ணையில் எண்ணெய் வார்த்து போலியாக உயர்த்தினார்கள்.

இப்படியெல்லாம் ஏறிப்போன கச்சா எண்ணைய் ஒரு பேரல் 75 டாலரில் இருந்து மீண்டும் கீழிறங்கி வந்திருக்கிறது. தேர்தல் விளையாட்டுகள் அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்காவில் தென்படுகின்றன. அரசியல் காரணங்களைத் தாண்டி நோக்கினால் நிஜமாகவே நிலையான எண்ணெய் விலை இறங்கி வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பழுதுபட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் பல மறுபடியும் இயங்கத் தொடங்கியதும், தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி உயர்ந்ததும், போலியாக விலையோடு விளையாடும் ஹெட்ஜ் ·பண்ட்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த முதலீடுகளை எல்லாம் விற்று சரிவை மேலும் தீவிரமாக்கியதும், ஏறுவது எல்லாமே இறங்கித்தான் தீர வேண்டும் என்ற இயற்கை விதியும் ஒன்று சேர்ந்து கூட விலையைக் கீழே இழுத்திருக்கலாம்.

சர்வதேசக் காரணங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அதைக் கடந்து நம்மை, நமது நாட்டை, நமது நிறுவனங்களை, பங்குச்சந்தையை கச்சா எண்ணைய் விலை எப்படிப் பாதிக்கிறது என்பதே நமக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை நிர்ணயிக்கும் பெருங்காரணியாக பெட்ரோல் விலை உள்ளது. போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலை, மூலப்பொருடகளுக்கான செலவு என எல்லா முனைகளிலும் பெட்ரோல் விலையேற்றம் பாதகமான விளைவுகளையே உருவாக்கும். அதனால் செலவுகள் கூடி நிறுவனங்களின் இலாப விகிதம் மந்தமடையும். இலாபம் குறைவதால் புதிய முதலீடுகள், விரிவாக்கம், வளர்ச்சி போன்றவை தடைபட்டுப் போகும். ஆகவே, பங்குச் சந்தையில் முதலிடப்படும் தொகை வற்றும், பங்குச்சந்தை முடங்கும். இந்த லாஜிக்கையெல்லாம் புறந்தள்ளி விட்டு இந்தியப் பங்குச்சந்தை சென்ற மூன்றாண்டுகளாக கச்சா எண்ணெய் விலையை விட வேகமாக வளர்ந்தது.

இதற்கு ஒரு வகையில் மூலமாக அமைந்தது அரசின் தலையீடு. சர்வதேச சந்தையில் என்ன விலைக்கு வாங்கினாலும் உள்நாட்டில் சில்லறை விலை இதற்கு மேல் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டின் காரணமாக ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் நட்டத்தை ஏற்றுக் கொண்டு வாடிக்கையாளருக்கு குறைவான தொகைக்கே வழங்கின. இதனால் மற்ற துறைகளின் எரிபொருள் செலவு ஏறவில்லை. இலாபத்தை பழைய அளவிலேயே பேண முடிந்தது. இந்தச் சுமை யாவும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பத்து ரூபாய் மானியம், நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு என இந்தியன் ஆயில் நிறுவனம் இயங்கியது. நல்ல வேளையாக, இப்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இது போன்ற ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மறுபடியும் தம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் அதற்கு ஏற்ப சில்லறை விலை இறங்காது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏன் தெரியுமா? பெட்ரோல் விற்பனையில் லேசான இலாபம் வந்தாலும், இன்னமும் சமையல் எரிபொருள் போனவற்றுக்கு அளிக்கும் மானியத்தால் இந்த நிறுவனங்கள் நட்டத்தில்தான் இயங்குகிறதாம்.

மானியம் வழங்கி வழங்கியே கூறு கெடுவதால் இந்த ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளை முதலீட்டாளர்கள் ஒதுக்கி வைப்பது உண்மையே. கடந்த ஓரிரு ஆண்டுகளில் அவற்றின் விலை இதையே பிரதிபலிக்கிறது. ஆயினும், 2002-03 சமயத்தில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு சில்லறை விலையை மாற்றும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. அப்போது இந்த நிறுவனங்களின் பங்கு விலை அமோகமாக வளர்ந்தது. இந்தியன் ஆயில் 300 சதவீதத்திற்கும் மேல் ஏறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எதற்காக பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்திற்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள்? இந்தியாவில் அரசுத் தலையீட்டில் எரிபொருள் விலை கட்டுக்குள் இருப்பினும், உலக அளவில் அப்படியில்லை. கச்சா எண்ணெய் விலை மூலப்பொருட்களின் விலையை ஏற்றும், அதன் மூலம் எல்லாப் பொருட்களுக்கும் விலைவாசி உயரும், பணவீக்கம் பெருகும், வட்டி வீதம் அதிகரிக்கும், பணம் அரிதாகப் போகும்……என்ற கணிப்புகளின் படி பங்குச்சந்தையில் இருந்து பணம் வெளியேறி பங்குச்சந்தைக் குறியீட்டைச் சரிய வைக்கும். இந்தப் பணம் இந்தியப் பணம் மட்டுமல்ல. உலகின் பிற பகுதிகளிலும் இருந்து இங்கே முதலிட்டவர்கள் விற்க ஆரம்பித்ததும் குறியீடு படுத்து விடுகிறது.

இதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை குறைந்தால், அது எல்லாப் பொருட்களின் விலையையும் குறைக்கும். உலகெங்கும் பணம் தாராளமாகப் புழங்க ஆரம்பிக்கும். அதன் ஒரு பகுதி இந்தியச் சந்தையிலும் பாயும். குறியீடு மேல் நோக்கிப் போகும். இதெல்லாம் பொதுவான விதிகள். விதிகள் என்றால் அவற்றோடு சில விதி விலக்குகளும் கூடவே இருக்கும். அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.

நமது இந்திய எரிபொருள் தேவையில் முக்கால்வாசி இறக்குமதி மூலமே நிறைவு செய்யப்படுகிறது. நமது மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவீதம் பெட்ரோல் பொருளுக்காக மட்டுமே ஒதுக்குகிறோம். கடந்த எட்டு வருடத்தில் இதற்கான அந்நியச்செலவாணி செலவு ஒன்பது மடங்கு கூடியிருக்கிறது. இது FY – 2006 இல் ஏழு இலட்சம் கோடிக்கு மேல். இறக்குமதி அதிகமாகிக் கொண்டே போவதால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் மூலம் வழங்கும் மானியமும் நாட்டின் வலுவைக் குலைக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. இதை ஈடுகட்டுவதற்கு அரசு வேறு ஏதாவது வழியில் மக்களிடம் இருந்தோ அல்லது நிறுவனங்களிடம் இருந்தோ வரியாகப் பெறும். ஏற்றுமதிப் பற்றாக்குறை FY – 2005 ஐ விட FY – 2006 இல் நான்கு மடங்காகி இருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து அதில் வரும் பணத்தில் இந்த ஏற்றுமதிப் பற்றாக்குறையை (current account deficit) நிவர்த்தி செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நாட்டைக் கூறு போட்டு விற்பதாக முடியும் என உள்நாட்டுப் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

இப்போது சர்வதேசச் சந்தையில் விலை இறங்கினால் அரசு ஆனந்தமாக உணரும். முன்பே சொன்னது போல ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கும் மகிழ்ச்சி. இதற்கு நேர் மாறாக உள்நாட்டில் பெட்ரோல் கிணறு தோண்டி எடுக்கும் ஓ.என்.ஜி.சி.யைப் பார்க்கிறார்கள். உலகச் சந்தையில் விலை என்னவாக இருந்தாலும் இந்த நிறுவனத்தின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதே அளவு தானே இருக்கும்? இருந்தாலும் சர்வதேச விலைக்கு இணையாக இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணெய் விற்று பெரும் இலாபம் ஈட்டியது. சென்ற சில வருடங்களில் இதன் பங்கு விலை அமோகமாக ஏறியதற்கு இதுவே காரணமாகும். அதைக் கவனித்த அரசாங்கம், “இனி நீங்களும் மானியத்தில் பங்கு போட வேண்டும்” எனப் பணித்து விட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் விலை மாற்றம் எப்படி இருந்தாலும் ஓ.என்.ஜி.சி. மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டு விட்டது.

சந்தையில் சில்லறை விற்பனையாகும் எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது உண்மையாக இருக்கிற பட்சத்தில், சர்வதேசச் சந்தையில் தற்போது குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை நமது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எந்த விதமான அனுகூலமும் உருவாக்கவில்லை என்பதே நிஜம். ஆனால் அரசாங்கமும், ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளும் சற்று இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்கள் இளைப்பாறினால் இன்னொரு முறை நம்மைத் தாங்கிப் பிடிப்பதற்கான ஆற்றலைக் கூட்டிக் கொள்வார்கள். நல்லது தான். ஒரு வேளை சர்வதேச விலை இதற்கும் கீழே போனால் அதன் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன.

சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும் நமது அரசாங்கம் சில்லறை விலையைக் குறைக்கவில்லை என்று குறை சொல்லாமல், சர்வதேசச் சந்தையில் விலை ஏறிய போது அதே வேகத்தில் இவர்கள் ஏற்றவில்லை என்பதில் மனதில் கொள்வோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு இரண்டு வாரப் பெட்ரோல் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலவாணியைத் தவிர ஏதும் இல்லாததால் நமது தங்கத்தை பேங்க் ஆ·ப் இங்கிலாந்தில் அடமானம் வைத்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது நாம் எத்தகைய வியத்தக முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பது புரியும்.

TAGS:FOREX ONLINE COURSES PONNER, FOREX PRICE ACTION PONNER, FOREX TRADING STRATEGIES PONNER, FOREX TRAINING COURSE PONNER, FOREX TRAINING COURSES PONNER
08 Jun 2014 11:03 am Posted by admin